சென்னையில் பராமரிப்பு இல்லாத செம்மொழிப் பூங்காவின் அவலம் தீர்க்கப்படுமா?

செம்மொழிப் பூங்கா சென்னை நகரின் மைய பகுதியில் அண்ணா மேம்பாலம் அருகில் கதீட்ரல் ரோடு-அண்ணாசாலை சந்திப்பில், அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் அமைந்து உள்ளது. இது 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா ஆகும்.

செம்மொழிப் பூங்காவில் 100 கார்கள் மற்றும் 500 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இங்கு பொது மக்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் பூங்காவில் அரிய வகை தாவரங்களும் உள்ளன. மருத்துவ, நறுமண மூலிகைகள், மற்றும் வெளிநாட்டு தாவரங்கள் ஏராளம் உள்ளன. இந்த பூங்காவிற்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பொழுது போக்குக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகிறார்கள். இங்கு பலர் நடைபயிற்சியும் செய்து வருகிறார்கள்.

பொது மக்களை கவரும் வகையில் அமைந்து உள்ள இந்த பூங்காவில் ஏராளமான மரங்கள், மற்றும் செடிகள் உள்ளன. பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் சிறு வர், சிறுமிகளை கவர்ந்து வந்தது.

இந்தநிலையில் தற்போது சரிவர பராமரிப்பு இல்லாதால் அலங்கோலமாக காட்சிஅளிக்கிறது. இங்குள்ள 3 முக்கிய அழகிய இசை நீரூற்றுகள் பழுதடைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் துருபிடித்து காணப்படுகின்றன.

மேலும் நடைபாதையில் உள்ள கற்கள் பெயர்ந்து பள்ளம், மேடுகளாக உள்ளன. இந்த பூங்காவில் நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்தபின் அமருவதற்கு போதுமான இருக்கைகள் இல்லை. எனவே புதிதாக கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும்.

இப்பூங்காவில் நாய்கள் தொல்லையும் உள்ளது. இதனால் நடைபயிற்சிக்கு வருபவர்கள் அச்சப்படுகிறார்கள். தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இங்கு பார்வையாளர்கள், நடைபயிற்சி செல்வோர், காதலர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகள் எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள். ஆங்காங்கே காதல்ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து கொண்டு காதல் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பூங்காவுக்கு வரும் காதல் ஜோடி களின் அத்துமீறலை தடுக்க வேண்டும். இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:- சென்னையின் முக்கிய பூங்காவாக செம்மொழிப் பூங்கா திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த பூங்கா சரிவர பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே பொதுமக்கள் வசதிக்காக உரிய அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பூங்காவில் உள்ள பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். கழிப்பறைகள் சுத்தம் இல்லாமல் காணப்படுகிறது. இதனையும் உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகிய இசை நீரூற்றுகள் தண்ணீர் இல்லாமல் பராமரிப்புகள் செய்யப்படாமல் உள்ளது. பூங்காவின் நுழைவு பகுதியில் செடிகள், புற்கள் பராமரிப்பு செய்யப்படாததால் காய்ந்த நிலையில் உள்ளன. பூங்காவின் பல்வேறு அவல நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.