சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.
77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடிக்கு முதல் வணக்கம். அதன் நிழலில் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல் வணக்கம்.
இந்திய ஒன்றியத்தின் முக்கிய அங்கம் நம் தமிழ்நாடு. மூத்த மொழியாம் தமிழை தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு அண்ணா முதலமைச்சர் ஆன பிறகுதான் 1967, ஜூலை 18ம் நாள் தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. ஒரே ஒரு சங்கரலிங்கனார்தான் உயிரிழந்துள்ளார் என்று நினைப்பீர்களேயானால், 5 உயிர்களைத் தர தயாராக இருக்கிறோம் என தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் கருணாநிதி. சென்னை மாகாணத்தின் பிற மொழி பேசும் எல்லா பகுதிகளும் தனித்தனி மாநிலங்களாக பிரிந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ஏன் தமிழ்நாடு என பெயரிடக்கூடாது என கேட்டவர் பெரியார்.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் 3வது முறையாக தேசியக் கொடியை ஏற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இதற்கான வாய்ப்பை அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்வர்களுக்கு சுதந்திர நாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி.