“தமிழகத்தில் யாத்திரை செல்வதை விட மணிப்பூருக்குச் சென்றால்தான் அங்குள்ள நிலைமை தெரிய வரும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வட்டம், வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் தகைசால் விருது பெறவுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ”மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவையெல்லாம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. அந்த மாநில காவல் துறை இயக்குநரிடம், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியே கேள்வி கேட்கிறார். மணிப்பூர் மாநிலம் 3 மாதங்களாகப் பற்றி எரிவதுடன், பாலியல் கொடுமைகள் குறித்து அரசு கவலைப்படவில்லை.
இது தொடர்பாகப் பிரதமர் வாய் திறக்கவும் இல்லை; நாடாளுமன்றமும் 8 நாள்களாக நடைபெறவும் இல்லை. இந்நிலையில், இந்த பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் குறுக்கிட்டுள்ளதும், தார்மிக உரிமை அடிப்படையில் அவர்கள் சொன்னதும், இதுவரையில், இங்கு ஆட்சி செய்தவர்களுக்கு நடந்ததாக வரலாறு இல்லை. எனவே, இந்த ஆட்சி தொடருவதற்குத் தார்மிக உரிமை உள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வியாகியுள்ளது.
மத்திய அரசைப் பொறுத்தவரை நம்பிக்கை இழக்கும்போது, மதக் கலவரத்தை வைத்துக் கொள்கிறது. அந்த வகையில் தற்போது ஹரியாணாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், அருகிலுள்ள நாட்டின் தலைநகரான புதுடெல்லிக்கும் பரவக்கூடிய அச்ச நிலை உள்ளது.
தமிழகத்தில் யாத்திரை செல்வதை விட மணிப்பூருக்கு சென்றால்தான் அங்குள்ள நிலைமை தெரிய வரும். எனவே, பாஜகவினரின் பயணங்களும், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என நீலிக்கண்ணீர் வடிப்பதும் எப்படிப்பட்டது என்பது எல்லோருக்கும் புரியும்” என்று பாஜக மாநிலத் தலைவர் யாத்திரை குறித்து கருத்து தெரிவித்தார்.