தமிழக அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொழி சிறுபான்மை அமைப்பினர் புகார்

தமிழக அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொழி சிறுபான்மை அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ஆளுநர் ரவியை மொழி சிறுபான்மை அமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்தனர். தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென் மாநில மொழிகள் உட்பட வேறு எந்த இந்திய மொழிகளையும் அனுமதிக்க வகை செய்யாத மாநில அரசின் கொள்கைகளால் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்பிக்க இயலாத தங்களின் சிரமங்களை விளக்கினர்.

தங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பற்றியும் ஆளுநரிடம் விளக்கினர். இத்தகைய கொள்கையால் 2.8 கோடிக்கும் அதிகமான மொழி சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழி மற்றும் கலாசாரத்தை மறந்து விடுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். வளமான தமிழ் மொழியை மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். ஆனால் தங்கள் தாய்மொழியையும் கற்க அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.