திமுகவைவிட, தமிழ் மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர் மோடி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இரண்டு நாள் பயணமாக டெல்லி வர உள்ளார். இதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் தவறுகளை சரி செய்ய, பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும் என்று வெளிப்படையாக அக்கடிதத்தில் ஒப்புக் கொண்டதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக, அந்த வழக்குக்குத் தேவையான ஆவணங்களைக்கூட நீதிமன்றத்தில் வழங்காமல், கச்சத்தீவு பறிபோக காரணமாக இருந்தது.
அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2009-ல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போது, இலங்கையில் தமிழ் மக்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து, அதைக் கண்டும் காணாமல் இருக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளைக் கடுமையாக சாடினார்.
இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, அன்றைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தியவர் மோடி. திமுகவை விட, தமிழ் மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர் பிரதமர் மோடி. 51,000 வீடுகள் உள்ளிட்ட, இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர்செய்துள்ள நலப்பணிகள் ஏராளம்.
இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13-ம் சட்டத் திருத்தம் கொண்டுவர, பிரதமர் மோடி இரண்டு முறை வலியுறுத்தியிருக்கிறார்.
மத்தியில், திமுக-காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 85 மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சியில், மீனவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகள் உண்டா? இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.