“மதுரையில் அதிமுக மாநாடு நடக்கும் நேரத்தில் திமுகவினர் உண்ணாவிரதம் நடத்தி திசைத் திருப்ப பார்க்கின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டினார்.
மதுரை விமான நிலையம் அருகே இம்மாதம் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடக்கிறது. இதையொட்டி டிஜிட்டல் , பலூன் பிரச்சாரம் அனுமதி பெறுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்து பேசினார். இதன்பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”மதுரை மாநகர அதிமுக சார்பில், புதிய மாநகர காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். மாநாடு குறித்து பிரசார பலுான்கள், டிஜிட்டல் வேன் பிரசாரம், டூவீலர் ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு போராடுகிறோம். ஏற்கெனவே இது தொடர்பாக காவல் துறையிடம் மன்றாடுகிறோம். இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இது பற்றியும் ஆணையரிடம் தெரிவித்தோம்.
நீட் தேர்வு குறித்து திமுக உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழக மக்களை மீண்டும் அக்கட்சி ஏமாற்றப் பார்க்கிறது. கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் மதுரையில் அதிமுக மாநாடு நடத்தும் தினத்தில் காழ்ப்புணர்ச்சியில் உண்ணாவிரதம் நடத்துகின்றனர். எங்களது மாநாட்டில் பொதுமக்களும், கட்சியினரும் அதிகளவில் பங்கேற்க இருக்கின்றனர். உளவுத் துறை மூலம் தெரிந்துகொண்டு, மாநாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தி, அன்றைக்கு அவர்கள் (திமுக) குறித்த செய்தி வெளிவர வேண்டும் என்ற நோக்கில் இந்த உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்கின்றனர்.
நீட் வருவதற்கு காரணமே திமுக. அவர்களுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அமைச்சகமே நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவர காரணமாக இருந்தது. நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து குடியரசுத் தலைவர், பிரதமர் வீடுகளுக்கு முன்பு திமுக உண்ணாவிரதம் நடத்தி இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும். இவற்றைத் தவிர்த்து, எங்களது மாநாடு நடக்கும் நேரத்தில் உண்ணாவிரதம் நடத்தி திசைத் திருப்ப பார்க்கின்றனர்” என்று அவர் கூறினார்.