திமுக – அதிமுக மோதலால் தேசிய கீதம் அவமதிப்பு

கல்பாக்கம் அருகே அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. தேசிய கீதம் பாடியதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மோதிக் கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செய்யூர் எம்எல்ஏ பாபு, மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 122 பேருக்கு, மிதிவண்டிகளை வழங்கினர்.

முன்னதாக, பள்ளியின் தமிழ் ஆசிரியை மதுபாலா வரவேற்புரையாற்றினார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கான இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார் என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, மேடையில் அமர்ந்திருந்த திமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் திருக்கழுகுன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிதான் இந்த திட்டத்தை கொண்டு வந்தார். அதை ஏன் மாற்றி கூறுகிறீர்கள் என தமிழ் ஆசிரியையிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

`தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளலாம். மாணவர்கள் முன்னிலையில் மேடையில் மோதல் வேண்டாம்’ என்று ஆசிரியர்கள் சமாதானப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. தமிழ் ஆசிரியையிடம் இருந்து திமுகவினர் மைக்கை வாங்கியதாக தெரிகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த புதுப்பட்டினம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபாலின் ஆதரவாளர்கள், திமுக ஒன்றிய செயலாளர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பள்ளி வளாகத்தில் அதிமுக மற்றும் திமுகவினரிடையே வாக்குவாதம் வலுத்து, மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் பள்ளி மாணவிகள் மூலம் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால், தேசிய கீதத்தை மதிக்காமல் திமுகவினர் தொடர்ந்துஅதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆசிரியர்களால் சமாதானப்படுத்த முடியவில்லை.

அரசு பள்ளி நிகழ்ச்சியை கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமித்தது; தேசிய கீதத்தை அவமதித்தது போன்ற செயல்களால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசியல் கட்சியினர் மீது சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இலவச மிதிவண்டி திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?: தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 2001-02-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்.

தொடக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவிகளுக்கே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பிறகு 2005-06-ல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2022-ல் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.