தேசிய அளவிலான தொல்லியல் கருத்தரங்கு

ஹரப்பா நாகரிகத்தின் தொடர்ச்சியாகவே நமது தற்போதைய வாழ்வியல் முறை அமைந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் வசந்த் ஷிண்டே தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, இந்திய வரலாற்று ஆய்வு குழுமம் (ஐசிஎச்ஆர்) இணைந்து நடத்தும் ‘ஹரப்பா நாகரிகத்தின் தற்கால தொடர்ச்சி’ எனும் 2 நாள் தேசிய கருத்தரங்கம், கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

பிரபல தொல்லியல் ஆய்வாளர் வசந்த் ஷிண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார். அவர் பேசியதாவது:

சிந்து நதிக்கரையை ஒட்டி 1921-ம் ஆண்டில் கண்டறியப்பட்ட ஹரப்பா நாகரிகம் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது. பண்டைய காலங்களில் முன்னேறிய நாகரிகங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்த பண்பாட்டு அடையாளத்தின் சாட்சியாக ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நகரங்கள் உள்ளன.

கழிப்பறை, குளியலறை… குறிப்பாக, ஹரப்பா நாகரிக காலத்தின் கட்டிடக் கலை மிக சிறப்பானதாக இருந்தது. தற்போதைய ‘இங்கிலிஷ் பாண்ட்’ வடிவிலான கட்டுமானங்களுக்கு முன்னோடியாக அதை கூறலாம். அந்த அளவுக்கு குடியிருப்புகளில் கழிப்பறை, குளியலறை, மழைநீர் சேகரிப்பு, கிணறு, திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் உட்பட பல்வேறு வசதிகள் இருந்தன. முழுமையான திட்டமிடலுடன் கட்டிடங்களை வடிவமைத்து, சுகாதாரமான முறையில் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

கணித அறிவியல் அடிப்படையிலான ஹரப்பா நாகரிக மக்களின் வாழ்வியல் வியக்க வைக்கிறது. கப்பல் மூலம் வாணிபம் செய்து, விவசாயத்தில் திறன் பெற்று, பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கினர்.

பருத்தி ஆடை, அணிகலன் அணிதல், மண்பாண்ட தொழில், வழிபாடு, யோகா, விளையாட்டு என அவர்கள் பின்பற்றிய பல்வேறு அம்சங்கள் இன்றைய வாழ்க்கையோடு பொருந்துகின்றன. தற்கால வாழ்க்கை முறையை, ஹரப்பா நாகரிக முன்னேற்ற வாழ்வியலின் தொடர்ச்சியாகவே கருத வேண்டியுள்ளது. இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் வசந்த் ஷிண்டே பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இணை இயக்குநர் சஞ்சய் குமார் மன்சூல், ஷாசுன் ஜெயின் கல்லூரி முதல்வர் எஸ்.பத்மாவதி, துணை முதல்வர் எஸ்.ருக்குமணி, கலை மற்றும் கலாச்சார துறை தலைவர் ரமாதேவி சேகர், ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எஸ்.டி.தீபா மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.