நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வெட்டிய வழக்கில் பிளஸ் 2 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது

நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தொடர்பான வழக்கில் பிளஸ் 2 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகன் வள்ளியூரிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவில் முனியாண்டியின் வீட்டுக்குள் ஒரு கும்பல் புகுந்து பிளஸ் 2 மாணவரை அரிவாளால் வெட்டியது. தடுக்க முயன்ற அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்களது உறவினர் கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீஸார் பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலியிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் வேதனை: இதனிடையே, “நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.