நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வடசென்னை தென்கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரைமாநாட்டுக்கான வாகன பிரச் சாரத்தை வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக மதுரை மாநாடு: இந்தியாவில் இதுவரை எந்தக் கட்சியும் நடத்தாத வகையில் அதிமுகவின் மதுரை மாநாடுநடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் தாக்கம், 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்த தகுதியும், முகாந்திரமும் திமுகவுக்கு இல்லை. நீட் தேர்வுக்கு போராட தகுதி இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுதான் நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்தனர். அதிமுக மதுரை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று விடும் என்ற பொறாமையில் உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது.
பேனர் வைத்தால் வழக்கு: திமுகவினர் பேனர் வைத்தால் வழக்கு போடுவது இல்லை. ஆனால், மாநாட்டுக்கு நாங்கள் பேனர் வைத்தால் வழக்கு போடுகிறார்கள். திமுகவின் பூச்சாண்டி காட்டும் வேலை, அதிமுகவிடம் எடுபடாது. அதிமுகவின் வரலாற்றை கொண்டாடும் மாநாடு என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை கடலில் காற்றாலை மின்சாரம் தயாரிக்க ரூ.30 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மீனவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.