பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்பட்ட நரிக்குறவர்களின் எஸ்.டி. சான்றிதழை அங்கீகரித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பில் மத்திய, மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களில் மிகவும் நலிவடைந்த, குறைந்த அளவிலுள்ள நரிக்குறவர்கள், பெருபான்மையாகவுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில், அவர்களுடன் போட்டியிட முடியாமல், முன்னேற்றம் அடைய முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவித்ததால் அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு குரூப் – 2 தேர்வு எழுத பலர் விண்ணப்பித்திருந்தனர். பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் முன்னர் அளித்த விண்ணப்பத்தில் எம்பிசி சாதிச் சான்றை இணைத்துள்ளனர்.
இதில் முதல் தேர்வில் வெற்றி பெற்று, மேற்கொண்டு நடைபெற இருக்கும் நேர்முகத் தேர்வுக்கு செல்ல இருக்கும் விண்ணப்பதாரர்களின் எஸ்டி சான்றிதழை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், இட ஒதுக்கீட்டில் உரிய பங்கீட்டையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.