இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் உயிர் பிரிந்தது.
புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஓவியர் மாருதிக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.
விகடன், குமுதம், குங்குமம், கண்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை – கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. ஓவியம் மட்டுமின்றி ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.