பொது சிவில் சட்ட பாதிப்புகள்: சட்ட ஆணையத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்

பொது சிவில் சட்டம் பன்மைத்துவத்துக்கும், பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு, இந்திய சட்ட ஆணையத் தலைவருக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கடிதத்தில் திருமாவளவன் கூறியிருப்பதாவது: 2018-ல் வெளியிடப்பட்ட சட்ட ஆணையத்தின் அறிக்கையில், பொது சிவில் சட்டத்துக்கு அவசியமில்லை என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பொது சிவில் சட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

இந்த சட்டம் பன்மைத்துவத்துக்கும், பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சியில், அடிப்படை உரிமைகளையும், அரசியலமைப்பு உறுதிசெய்துள்ள மதச் சார்பின்மை கொள்கைகளையும் அரசு மீறுகிறது.

இந்த சட்ட வரம்பிலிருந்து கிறிஸ்தவர்கள் மற்றும் சில பழங்குடியினப் பிரிவினருக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், பொது சிவில் சட்டத்தின் நோக்கம் குறித்தே கேள்வி எழுகிறது.

தனி நபர் சட்டங்களின் கீழ் பாகுபாடுகளை சரி செய்வது மிக முக்கியம். பெரும்பான்மை மதமான இந்து மதத்தில் நிலவும் பாரபட்சமான நடைமுறைகளை ஒழிக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து கோயில்களில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு இயற்றிய சட்டம், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய முக்கியமான எடுத்துக்காட்டு. பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதைவிட, இதுபோன்ற நடவடிக்கைகளே முக்கியமானவை.

சட்டமேதை அம்பேத்கர் மீது அரசுக்கு மரியாதை இருந்தால், இந்து மதத்தின் அனைத்து சாதியினருக்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். பொது சிவில் சட்டம் தொடர்பான இந்தக் கவலைகள் மற்றும் ஆட்சேபத்தை, இந்திய சட்ட ஆணையம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

நமது சமூகத்தின் பன்முகத்தன்மையை மதிக்கும் முற்போக்கான சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் அதேநேரத்தில், தனி நபர் சட்டங்களைப் பாதுகாப்பது சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், சமூகநீதிக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் அவசியாகும். இவ்வாறு கடிதத்தில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.