பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த பெரும்பாலான கல்லூரிகள் ஆர்வம்: உயர் கல்வி அமைச்சர் பொன்முடி

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பெரும்பாலான கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டத்தை உயர்கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது. இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வித்துறை சார்பில் தன்னாட்சி கல்லூரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, செயலர் எ.கார்த்திக், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா,உயர்கல்வி மன்றத் துணைத்தலைவர் அ.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம். சிலர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தாலும், பெரும்பாலானவர்கள் பொது பாடத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு 90 சதவீதம் கல்வி நிறுவனங்களில் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளனர்.

பொது பாடத்திட்டம் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவதால் பல்கலைக்கழகங்களின் உரிமைகள் பாதிக்கப்படாது. அனைத்து பல்கலை.களின் பாட வாரியங்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே பொது பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமாணவர்கள், கல்வி நிறுவனங்களுக்கு பயனளிக்கும்.

கூட்டத்தில் சில கல்லூரி முதல்வர்கள் தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசினர். அதில் உள்ளநல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளலாம். எனினும், தமிழகத்தில் விரைவில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.

கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் பொது பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். 900 கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்திதான் பாடத்திட்டத்தைகொண்டு வந்தோம். தேவைப்பட்டால் பழனிசாமிக்கு நேரில் விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளேன். ஒரே பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் அரசியலுக்காக பேசுகிறாரா என எனக்கு தெரியவில்லை. பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த யாரையும் நிர்பந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டதன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் சிலர்பாடத்திட்டத்தை எதிர்த்து கருத்துகளை முன்வைத்தனர். தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் சிலர் கூறும்போது, ‘‘பொது பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அவற்றை கூட்டத்தில் எடுத்துரைத்தோம். அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க அமைச்சர் கூறியுள்ளார். உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறோம். பொது பாடத் திட்டத்தை அமல்படுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.