: போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெ.தீபாவை கொடியேற்ற விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்தார். அவரது மறைவையடுத்த பல்வேறுகட்ட நிகழ்வுகளுக்கு பிறகு, இந்த வீடு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, வேதா இல்லத்தில் ஜெ.தீபா தேசியக் கொடி ஏற்றச் சென்றார். அப்போது அங்கு கொடியேற்றக் கூடாது என அவரது சகோதரர் தீபக் தகராறு செய்துள்ளார். இதையடுத்து சிறிது நேர சலசலப்புக்கு பிறகு தீபா தேசியக் கொடியை ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.தீபா கூறியதாவது: வேதா இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் எனது சகோதரர் தீபக் தடுக்கிறார். இந்த வீட்டில் 2 பேருக்கும் உரிமை உள்ளது. நானே விரும்பினாலும் தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த வீட்டில் பராமரிப்புப் பணிகளைக்கூட செய்ய முடியாத நிலை உள்ளது. அவர் என்னை தடுப்பது முறையல்ல.கோடநாடு கொலை வழக்கில் சசிகலா குடும்பத்துக்கும் தொடர்பு உள்ளது. அவர்களது தூண்டுதலின் பேரில் இந்த கொலை, கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.