மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி நாளை ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் 23-ம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: பாஜக ஆட்சி புரியும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பாஜக அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று, பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை வெளிவந்துள்ளது. இது, அனைவரின் உள்ளத்தையும் பதறவைக்கும் வகையில் உள்ளது.

கலவரங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. மத்திய பாஜக அரசும், மகளிருக்கு எதிரான இந்தக் கொடுமைகளைத் தடுக்கத் தவறிவிட்டது.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான இக்கொடுமையைக் கண்டித்து, திமுக மகளிரணி சார்பில் வரும் 23-ம் தேதி மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்சியின் துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 24-ம் தேதி: மேலும், வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஆணையத்துக்கு கோரிக்கை: இதற்கிடையே, தமிழக சமூகநலன், மகளிர் உரிமைத் துறைஅமைச்சர் கீதாஜீவன் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேரிட்ட கொடுமைகள் நெஞ்சத்தை உலுக்குகிறது. ஒரு பெண்ணாக, இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டு பதறுகிறேன், வன்மையாகக் கண்டிக்கிறேன். மணிப்பூர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மதவெறியைத் தூண்டி,மாநிலத்தை கலவரக் காடாக்கி,ரத்த ஆறு ஓடும்படி செய்திருக்கின்றன மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், மத்திய அரசும்.

ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் நலனைக் கருதியும், மணிப்பூர் மாநிலப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், தேசிய மகளிர் ஆணையம் தனது கடமையை விரைந்து மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.