மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறையால் மனம் உடைந்தேன்

மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறையை கண்டு மனம் உடைந்து போயுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை, மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் குழு ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களையும் அந்தக் குழு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

“மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர வன்முறை செயலின் வீடியோவை பார்த்து மனம் உடைந்து போயுள்ளேன். இந்த வெறுப்பும், விஷமும் சார்ந்த பிரச்சாரம் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இந்த அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, சிறந்த சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும்.

மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.