மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம்- சேம.நாராயணன் அரசுக்கு வலியுறுத்தல்

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் மாநில செயற்குழு கூட்டம், 50-ம் ஆண்டு பொன்விழா மற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா சங்கத்தின் தலைவர் டாக்டர் சேம.நாராயணன் தலைமையில் இன்று நடந்தது. பாவலர் கணபதி வரவேற்றார்.

எஸ்.என்.பழனி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 41 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- விஸ்வகர்மா திட்டத்தின் வாயிலாக அதிகபட்ச 5 சதவீத வட்டியுடன் ரூ.1 லட்சமும், இரண்டாம் கட்டமாக ரூ.2லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

விஸ்வகர்மா திட்டத்தில் தட்சர்கள், பட்டு தயாரிப்பாளர்கள், குயவர்கள், சிற்பிகள், கொல்லர்கள், கொத்தனார்கள், பொற் கொல்லர்கள், பூட்டு தொழிலாளர்கள், செருப்பு தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயன்படும் வகையில் அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதுப்பானையும் ஒரு புது அடுப்பும் அரசு கொள்முதல் செய்து விலையில்லாமல் வழங்க வேண்டும். வெண்ணிக்குயத்தியாருக்கு அவர் பிறந்த கும்பகோணத்திலுள்ள வெண்ணிப்பறந்தலை என்ற ஊரில் முழு திருவுருவச் சிலை நிறுவி அரசு விழாவாக ஆண்டு தோறும் நடத்திட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நடந்த மீனவர் நல மாநாட்டில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்குவதை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு வழங்கும் என்று அறிவித்துள்ளார். அதை வரவேற்கிறோம். இதே போன்று மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதனை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வேண்டி வலியுறுத்துகிறோம். மாவட்டங்கள் தோறும் கலை நயமிக்க மண்பாண்டங்கள் தயாரிக்க தொழிற்கூடங்களை அரசு அமைக்க வேண்டும்.

நலவாரியத்தில் இது நாள் வரை பதிவு செய்திட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய மின்சக்கரம் இலவசமாக வழங்கிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மண்பாண்டத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக வசித்து வருகின்ற வீட்டிற்கும் அவர்கள் தொழில் செய்யும் இடத்திற்கும் அடிமனை பட்டா வழங்கிட வேண்டுமாய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேண்டி கேட்டுக் கொள்கிறோம். ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாணவரணி ஆனந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மகேஷ் நன்றி கூறினார். மாலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் விருது வழங்குகிறார்.