மதம் மாறுவதுபோல் சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்- வைரமுத்து ஆதங்கம்

நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகிய 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

“நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில்

விழுந்த வெட்டு

சாதியைக்கூட மன்னிக்கலாம்

அதற்கு

இழிவு பெருமை கற்பித்தவனை

மன்னிக்க முடியாது

சமூக நலம் பேணும் சமூகத் தலைவர்களே!

முன்னவர் பட்ட பாடுகளைப்

பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள்

அல்லது மதம் மாறுவதுபோல்

சாதி மாறும் உரிமையைச்

சட்டமாக்குங்கள்”

என்று குறிப்பிட்டுள்ளார்.