மதுரை அருகே 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த 7 கற்சிற்பங்கள் கண்டெடுப்பு

 மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள தென்னம நல்லூர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்சிற்பங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் அனந்தகுமரன், சிவன் ஆகியோர் தென்னமநல்லூர் பகுதியின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டபோது கி.பி 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டறியப்பட்டது.

இது குறித்து கள ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியாதவது: “மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் இப்பகுதியை தென்னவன் என்ற குறுநில மன்னர் ஆட்சி நிர்வாகம் செய்துள்ளார். அவரது பணியை பாராட்டி நாயக்கர் மன்னர், இந்த பகுதிக்கு தென்னவன் நாடு என்று பெயர்சூட்டி உள்ளார். காலப்போக்கில் இது தென்னம நல்லூர் என பெயர் மருவியது.

சதி வழக்கம்: இறந்துபோன கணவருடன் அவரது மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்தபின் அவர்கள் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் சதிக்கல் எனப்படுகிறது. இதில் கணவனுடன் மனைவியும் இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதைக் காட்ட கை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவளாகவும் காணப்படுகிறாள். தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்ற சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை.

இத்தகைய சதிக்கல் கோவில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்று பலவாறாக அழைப்பர். மாலை, சதி ஆகிய சொற்களுக்கு பெண் என்ற பொருள் உண்டு. நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கைம்பெண்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்தன. ஆனால் உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாகப் போற்றி வணங்கினர். கணவன் மீது கொண்ட அன்பினாலோ, கட்டாயத்தினாலோ பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது. மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டு பல குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள். குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது.

ஏழு சதிக்கல்: தற்போது ஊரின் கிழக்கு பகுதியில் நீரோடை அருகே முட்புதரில் இந்த சதிக்கற்கள் புதைந்து இருந்தன. இச்சதிக்கற்கள் 3 அடி உயரம், ஒன்றரை அடி அகலமும் கொண்டவை . கற்சிலை மேல் கூடாரம் அமைப்பு சாய்வாகவும், முக்கோண வடிவமாகவும் ,வட்ட வடிவமாகவும் காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன. மொத்தம் ஏழு சதிக்கல்கள் இருக்கின்றன. பொதுவாக இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் சிற்ப வடிவத்தில் ஆணின் உருவம் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி வீரன் என்பதற்காக வலது கையில் வாள் கத்தி போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.

ஆணின் சிற்பத்தின் அருகில் பெண் சிற்பம் அமைந்துள்ளது. பெண் சிற்பம் இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கி வலது கையில் எலுமிச்சம் பழத்தை மடக்கிப் பிடித்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் சுமங்கலி என்பதன் குறியீடாக இது பார்க்கப்படுகிறது. இதே போன்ற வடிவம் ஒரே இடத்தில் 7 சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை தற்போது தனியார் நிலத்தில் புதர்கள் மண்டி கேட்பாரற்று கிடக்கிறது.” இவ்வாறு முனைவர் து.முனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.