மருத்துவப் படிப்புகளுக்கு நெக்ஸ்ட் தேர்வு: மாநில உரிமைப் பறிப்பு; மாணவர்களுக்கு மன உளைச்சல்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘ நெக்ஸ்ட்’ (National Exit Test- NExT) தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு இந்தக் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்றும், மே மற்றும் நவம்பர் மாதங்களில் இரு தேர்வுகளாக நடக்கும் எனவும், வரும்  ஜூலை 28 ஆம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், ‘நெக்ஸ்ட் 1′ தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, பயிற்சி மருத்துவராகப்  பணியாற்ற முடியும். அதேபோல ‘நெக்ஸ்ட் 2′ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கும், இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது ‘நெக்ஸ்ட்’ (NExT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடங்கியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும்.

ஏற்கெனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வானது தமிழகத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் தற்போது நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக்கல்வி அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு முறை, மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

மருத்துவப் படிப்புகளுக்கான காலத்தை அதிகரிக்கச் செய்து, மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்குத் தள்ளும் நெக்ஸ்ட், மருத்துவ தகுதித் தேர்வு நடத்தும் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் கைவிட வேண்டும்.