தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
சென்னை போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உள்ளார். போராட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய துரைமுருகன், நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோயுள்ளது. மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நீட் தேர்வை திணிக்கும் செயலில் மோடி அரசு வேகமாக இயங்குகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பலர் விடும் சாபம் மத்திய அரசை அகற்றும்.
இந்தியை எதிர்த்ததுபோல நீட் தேர்வை அகற்றுவதிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. நீட் தேர்வு ஒழிந்தது என சரித்திரத்தில் இடம்பெறும். இதனை உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.