முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறல்களை பட்டியலிட்டு குடியரசுத் தலைவருக்கு விரிவான கடிதம் எழுதியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. ஆர்.என்.ரவி, ஆளுநர் பொறுப்பேற்ற ஆரம்ப நாளில் இருந்தே அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ள சட்டப்படியான கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை.

மாறாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அமைக்கப் பெற்றுள்ள சட்டமன்றப் பேரவையின் அதிகாரத்தில் தலையிட்டு இடையூறு செய்வது, அமைச்சரவையின் ஆலோசனைகளை நிராகரித்து மக்களாட்சி முறையை அவமதிப்பது, அரசின் கொள்கை முடிவுகள் மீது பகிரங்க தாக்குதல் நடத்துவது, முதல்வரின் முதலீடு திரட்டும் வெளிநாட்டு பயணத்தை கேலி செய்து, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது, பல்கலைக் கழக துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி அரசின் உயர் கல்வித் துறை நிர்வாகத்தில் தலையிட்டு எதிர் நடவடிக்கை மேற்கொள்வது என எல்லை கடந்து செயல்பட்டு, ஆளுநர் பொறுப்புக்கு, ஊசி முனையளவும் பொருத்தம் இல்லாதவர் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறல்கள் மற்றும் அநாகரிக செயல்பாடுகள் குறித்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதியும், கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் குடியரசுத் தலைவர் அவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் வரம்பு மீறிய செயல்பாடுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மக்களின் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வர், மக்களின் ஒட்டு மொத்த ஜனநாயக உணர்வை பிரதிபலித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பிருப்பது மிகவும் பொருத்தமானது. முதல்வரின் கடிதத்தின் உணர்வுக்கு மதிப்பளித்து, ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.