விவசாயிகளின் காலவறையற்ற போராட்டம் ஆக.15-ல் சென்னையில் தொடக்கம்: பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 15 முதல் காலவறையற்ற போராட்டத்தை சென்னையில் தொடங்குவதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் இன்று மதுரையில் நடந்தது. ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக் குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியது: ”திமுக தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு கூறியபடி விலையை உயர்த்தி கொடுக்கவில்லை. தமிழகத்தில் நடப்பாண்டில் உணவுப் பொருட்களின் உற்பத்தி பாதிக்கும். தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் ஒரு முறை கூட கருத்து கேட்புக் கூட்டம் நடத்தவில்லை. மத்திய அரசு தமிழ்நாடு மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய வரி நிலுவையை மத்திய அரசு வழங்காமல் புறக்கணிக்கிறது. காவிரி ஆணையத்தை அவசரமாக கூட்டி மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கவேண்டும். ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி கடிதம் எழுதவேண்டும். நில உரிமைச் சட்டம் 2023-ஐ அரசு வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றவேண்டும் என, வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 15 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.

என்எல்சி சட்டவிரோதமாக செயல்படுகிறது. என்எல்சி நிர்வாகத்துக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது. முதல்வர் விவசாயிகளை சந்திக்க விரும்பவில்லை. பலமுறை கடிதம் எழுதியும் வாய்ப்பளிக்கவில்லை. விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய உபகரணங்கள் நடப்பாண்டில் வழங்கவில்லை. அதற்கான கோப்புகளை தமிழக அரசு செயலர் நிறுத்தி வைத்துள்ளார்” என்று அவர் கூறினார்.