வரவு செலவுத் திட்டத்திற்குப் பின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். அதற்கமைய, செய்யக்கூடிய அனைத்தையும் விரைவில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை (17)  கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2027 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளமும் தற்போதைய நிலையை விட உயர் நிலைக்கு கொண்டுவரப்படும். 2027ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற வேண்டிய சம்பளத்திற்குரிய அனைத்துச் சலுகைகளும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலிருந்தே வழங்கப்பட்டும் வருகிறது.

குறிப்பிட்ட சில துறைகளில் சிக்கல்கள் நிலவுவதை அரசாங்கம் என்ற ரீதியில் ஏற்றுக் கொள்கின்றோம். அனைத்துத் துறைகளின் பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது என்பதால், அந்தப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்க்கப்படும்.

அந்த வகையில் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தும். நாம் அவற்றை செவிமடுக்கிறோம். செய்யக்கூடிய விடயங்களை விரைவில் செய்வோம். எனினும், எந்தவொரு ஆர்ப்பாட்டமும் வேலைநிறுத்தமும் இல்லாத ஒரு காலகட்டத்தில், 2025 பிப்ரவரி மாதத்தில் அரசாங்கமாகத் தீர்மானித்து மிகக் பாரிய சம்பள உயர்வை வழங்கியது.

இது மிக நீண்டவொரு காலப்பகுதிக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற உயர்ந்தபட்ச சம்பளத் தொகையாகும். 2027இல் கிடைக்கவிருக்கும் சம்பளத்துக்கு கூறிய மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, மேலதிக கடமைகள் உள்ளிட்ட சலுகைகளை 2025 ஏப்ரல் மாதத்திலிருந்தே வழங்க நாம் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

2027 ஜனவரியிலும் அடிப்படைச் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், வேண்டுமென்றால் இவற்றைக் கொடுக்காமல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்திருக்கலாம். ஆனால், பல துறைகளில் பிரச்சினைகள் உள்ளதை நாம் அறிவோம்; அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரே தடவையில் தீர்க்க முடியாது. எனவேதான், இந்தத் தருணத்தில் சில குறிப்பிட்ட துறைகளுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தக் கொடுப்பனவுகளில் சில ஜனவரி முதல் அல்லாமல் ஜூலை மாதத்திலிருந்தே செயற்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில்தான் கொடுப்பனவுகளின் ஒரு பகுதி கிடைக்கப்பெறுகிறது. இந்த அனைத்துக் கொடுப்பனவுகள், சம்பள அதிகரிப்புகள் மற்றும் சலுகை அதிகரிப்புகளுடன் நாம் எதிர்பார்க்கும் 2000 பில்லியன் ரூபா மூலதனச் செலவைச் செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை அடைய முடியும்.

இதன் மூலம் நடைமுறை செலவுகளை 9 சதவீதம் என்ற எல்லைக்குள்ளோ அல்லது அதற்குக் குறைவாகவோ பேணி, அதற்காகச் செலவிடக்கூடிய எல்லையை அதிகரிக்க எங்களால் முடியும். அதுவே அரசாங்கத்தின் இலக்காகும். எனவே, மேலும் கொடுப்பனவுகளை வழங்க முடியுமாயின் நாம் வழங்குவோம்; ஆனால் அனைத்தையும் ஒரே தடவையில் வழங்க முடியாது என்றார்.