கடந்தகால ஆட்சியாளர்கள் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டிருந்தபோதும் நாட்டுக்கு பல அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அரசாங்கம் நிதி ஒதுக்குகின்றபோது, அதனை செலவழிப்பதில்லை. நிந்தவூர்  கவாசார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட 30 கோடி ரூபாவில் ஒரு கோடி ரூபாகூட செலவிடப்படாமல் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான நான்காம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை பார்க்கும்போது வரவு முழுவதும் அரசாங்கத்துக்கும் செலவு முழுவதும் சாதாரண பொது  மக்களும் பொறுப்பெடுக்க வேண்டிய நிலையே இருக்கிறது. நாட்டில் 61 வீதமான மக்கள் வறுமை நிலையில் இருப்பவர்களாகும்.  அவர்களுக்கு எவ்வாறான நிவாரணங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்க்க வேண்டும். அந்த மக்கள் அரசாங்கத்தின் மீது பாரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தார்கள். மின்சார கட்டணம், எரிபொருள், எரிவாயு  விலைகளை குறைப்பதாக தெரிவித்திருந்தீர்கள். குறைந்த விலைக்கு வாகனங்களை வழங்குவதாக தெரிவித்திருந்தீர்கள். இந்த வாக்குறுதிகள் காரணமாகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்திருந்தீர்கள்.

அதேநேரம் கடந்த கால  அரசாங்கங்கள்   துஷ்பிரயோகங்களல் ஈடுபட்டிருந்ததை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் அவ்வாறு செய்திருந்தபோதும் அவர்கள் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுவந்தார்கள். நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி என பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் அரச துறையில் இருக்கும், உங்களுக்கு உதவக்கூடிய நிர்வாக கட்டமைப்பில் இருப்பவர்களுக்கு  மாத்திரம் சம்பள அதிகரிப்புகளை செய்திருக்கிறது. 15 இலட்சம் அரச  ஊழியர்களும் கடைகளில் பணம்கொடுத்துதான் பொருட்களை வாங்குகிறார்கள். அதனால் அவர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்த ஆட்சியாளர்கள் நாட்டுக்கு தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தார்கள். ஆனால் நீங்கள் கடந்த இரண்டு வருடங்களில் என்ன செய்தீர்கள்? நிதிகளை ஒதுக்கியபோதும் எந்த  வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை. நிந்தவூரில் கலாசார மண்டப நிர்மாண பணிக்கு  கடந்த வருடம் 300 மில்லியன் ஒதுக்கியபோது நாங்கள் சந்தோசப்பட்டோம். ஆனால் அந்த நிதியில் ஒரு கோடி ரூபாகூட செலவிடப்படாமல் இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே அந்த நிதி இருக்கப்போகிறது.

அதனால் அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் வரவு செலவு திட்டத்தில் நிதிகளை ஒதுக்கினாலும்  அந்த நிதிகளுக்கு வேலைகள் இடம்பெறுவதில்லை. அதனால் ஒரே வேலைத்திட்டத்துக்கு  மீண்டும், மீண்டும் நிதி ஒதுக்கி, பணத்தை சேகரிக்கும் திட்டத்தையே அரசாங்கம் மேற்கொண்டு  வருகிறது. அரசாங்கம்  வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து, ஒரு வீட்டை நிர்மாணிக்க 10 இலட்சம் ரூபா மாத்திரமே வழங்குகிறீகள். அதனால் அந்த வீட்டை பூரணப்படுத்திக்கொள்ள தேவையான பணத்தை அந்த பிரதேசங்களில் இருக்கும்  பள்ளிவாசல்கள், தனவந்தர்களே வழங்குகிறார்கள். ஏனெனில் அந்தளவுக்கு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருகோடி ரூபா வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தற்போதுள்ள விலைவாசிக்கு ஒருகோடி ரூபாவால் என்ன செய்ய முடியும் என கேட்கிறோம். பால்மா 290 ரூபாவுக்கு இருக்கும்போதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருகோடி ரூபா வழங்கப்பட்டத்து. இப்போது 1500 ரூபாவாக இருக்கும்போதும்  ஒருகோடி ரூபாவே வழங்கப்படுகிறது.

எனவே அரசாங்கத்தின்  வரவு செலவு திட்டம் அரசாங்கத்தை தொடர்ச்சியாக வழிநடத்திச் செல்வதற்கு தேவையான விடயங்களையும்  அதற்கு அரசாங்கத்துக்கு உந்துசக்தியாக அதிகார ரீதியாக இருக்கின்ற அலுவளர்களுக்கு  சம்பள உயர்வுகளையும் ஏனைய வேலைத்திட்டங்களையும் மாத்திரமே கொண்டிருக்கிறதே  தவிர, சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்றார்.