அதிகளவு நீர் அருந்திய இளம்பெண் திடீரென உயிரிழப்பு

அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 20 நிமிடங்களில் 2 லீற்றர் நீர் அருந்தியதால் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள்.

தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. இனி வரும் நாட்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 லீற்றர் தண்ணீரை அதாவது 4 போத்தல் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் கூறியதாவது:

வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடங்களில் நான்கு போத்தல் தண்ணீரை குடித்துள்ளார். 20 நிமிடங்களில் சுமார் 2 லிற்றர் தண்ணீர் குடித்துள்ளார்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்குச் சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின்னரே அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நிலைமை மோசமானது. பின்னர் அவர் உயிரிழந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வைத்தியர் பிளேக் ப்ரோபெர்க் கூறியதாவது,

இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள். உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றார்.