இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கிய திரெட்ஸ்

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.

தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தங்களின் தகவல் மற்றும் லிங்க் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவிடலாம். பிறரிடமிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்கலாம் அல்லது மறுபதிவு செய்யலாம்.

திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்நிலையில், திரெட்ஸ் சேவை தொடர்பாக டுவிட்டர் தளத்திலும் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பயனர்களுடன் இணைந்து டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டிருக்கிறார். ஒரு டுவிட்டர் பயனர் திரெட்ஸ் செயலியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் இந்த கீபோர்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்த அந்த பயனர், கீபோர்டு போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். அதில் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் பட்டன்கள் மட்டுமே இருந்தன. இந்த பதிவை பார்த்த மஸ்க், சிரிக்கும் முகத்தின் எமோடிகானை பதிவிட்டு பதில் அளித்துள்ளார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டதன்மூலம், திரெட்ஸ் செயலியானது, டுவிட்டரின் பிரதி என்று கூறுவதுபோல் தெரிகிறது.