இத்தாலியின் தீவில் படகு மூழ்கி 41 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் லம்பேடுசா தீவில் படகு உடைந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் பகுதியிலிருந்து ஒரு படகு நேற்று முன்தினம் இத்தாலியை நோக்கி வந்துள்ளது. ஏராளமான அகதிகள் பயணித்த இந்த படகு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவு அருகே வந்தபோது திடீரென உடைந்துள்ளது.

இதில் பயணித்தவர்கள் கடலில் விழுந்தனர். சம்பவம் அறிந்த கடலோர காவல் படையினரும், அந்த வழியாக வந்த சரக்கு கப்பலைச் சேர்ந்த வீரர்களும் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடலில் விழுந்து தத்தளித்த சிலரை அவர்கள் மீட்டனர். இதில் 3 ஆண்கள், ஒரு பெண் உள்ளிட்டோர் அடங்குவர் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த விபத்தில் 41 அகதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிர் தப்பியவர்கள் லம்பேடுசா தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் சிலவற்றை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

லம்பேடுசா தீவு, இத்தாலியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. 2000-ம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, முக்கியமாக லிபியாவிலிருந்து வந்து குடியேறுபவர்களுக்கான முக்கிய ஐரோப்பிய நுழைவுப் புள்ளியாக லம்பேடுசா மாறியுள்ளது. வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலி நாட்டுக்கு அகதிகளாக செல்லும் முயற்சியில் இந்த ஆண்டு மட்டும் 1,800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.