இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக வடக்கு சுமத்ரா மாகாணம் திகழ்கிறது. வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு, இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைகள் இல்லாமல் இருந்துவந்தது. இங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று, அங்கிருந்து இணைப்பு விமானங்கள் மூலம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் வடக்கு சுமத்ரா தலைநகர் மேடான் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் சென்னை விமான நிலையத்துக்கு நேரடி தினசரி விமான சேவையை பாட்டிக் ஏர் விமான நிறுவனம் நேற்று முன்தினம் தொடங்கியது. வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மேடான் விமான நிலையத்தில் இருந்து 51 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் இரவு 10.45 மணிக்கு சென்னை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர், விமானம் நள்ளிரவு 12 மணிக்கு 43 பயணிகளுடன் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மேடான் விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது. ஏற்கெனவே சேவையில் இருந்த இந்த விமான சேவை, கரோனா தொற்றால் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.