தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சியோ-வும் ஒருவர். பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
அதிபர் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பெர்னாண்டோ காரில் ஏறினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பெர்னாண்டோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில், தலைநகர் குயிட்டோவில், ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஆறுபேரை கைது செய்துள்ளனர். ஆறு பேரும் வெளிநாட்டினர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த கொலை பயங்கரவாத தாக்குதலான அரசியல் குற்றம் என விவரித்த, ஈக்வடார் அதிபர், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கவில்லை. இதற்கிடையே நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.