இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹினா ரப்பானி கர். இவர் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘பாகிஸ்தான் ஆட்சி மன்றம் 2023’ எனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது இந்தியாவுடனான உறவுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து ஹினா கூறியதாவது:- இந்தியா மேற்கத்திய நாடுகளின் டார்லிங்.
ஒரு சில நாடுகளுக்கு மட்டும் இந்தியா தங்கள் கதவுகளை முழுவதும் திறந்து வைத்துள்ளது. ஆனால் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகள் சிலவற்றுக்கும், அங்கேயே வாழும் ஒரு சிலருக்கும் இறுக்கமான மன நிலையை காட்டி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஏசியன் போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளை காணும்போது, ஒரு நாடு வளர்ச்சி அடைவதற்கு அதன் அண்டை நாடுகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெளிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு காரணங்களால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியாவிற்கு உள்ள உறவுகளில் தற்போது ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவிற்கு நட்பு வளர்ந்து வருகிறது. இந்த ஈடுபாட்டை மறைமுகமாக கேலி செய்யும் விதமாக ஹினாவின் கருத்துக்கள் அமைந்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.