அவர் பேசியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று திமுக தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ‘‘கச்சத்தீவை பிரதமர் நரேந்திர மோடி மீட்க வேண்டும்’’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்தான் அது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
இந்தியாவை உடைப்பதே காங்கிரஸின் வரலாறாக உள்ளது. தமிழகத்தில் பாரதமாதாவுக்கு பூஜை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. பாரத மாதா குறித்து சிலர் மோசமாக பேசியதால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருத்தம் அடைந்துள்ளது. அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக தலைவர் ஒருவர், “தமிழ்நாடு, இந்தியாவில் இல்லை’’ என்று பேசியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாமை கொடுத்தது தமிழ் மண் என்பதை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு பிரதமர் கூறினார்