கொலம்பியாவின் பொகட்டோ பகுதியில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்கடர் அளவு கோலில் இது 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டோடியது. இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பீதியில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அவர்கள் நீண்ட நேரம் வீதிகளில் பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.இந்த நிலையில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர் உயிர் பயத்தில் 10-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தரையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். நிலநடுக்கத்தால் பீதியில் உறைந்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் கழித்தே வீடு திரும்பினார்கள். கொலம்பியாவில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தில் 11 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.