சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளில் ‘காஷ்மீர்’

2019 ஆகஸ்ட் 5ஆம் திகதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370இன் கீழ் மத்திய அரசு இரத்து செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், அமைதியை மீட்டெடுப்பது மற்றும் அமைதியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் அதன் மிக முக்கியமான சாதனைகளாக உள்ளன.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காஷ்மீர் தற்போது பல மாற்றங்களை கண்டுள்ளது. மக்கள் வாழ்க்கை, பொதுவாக இடையூறுகள் இல்லாமல் இயல்புக்கு திரும்பியது.

மேலும், பள்ளத்தாக்கில் பயங்கரவாத நடவடிக்கைகள் கடுமையாக குறைந்துள்ளன. 2023இல் உள்ளூர்வாசிகளை தீவிரவாதத்துக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பயங்கரவாத கொலைச் சம்பவங்கள் ஆகிய இரண்டிலும் சரிவு ஏற்பட்டது.

370வது பிரிவு இரத்து செய்யப்பட்டதன்  விளைவாகவே அமைதியான சூழல் அங்கு ஏற்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 5 வரை பாதுகாப்புப் படையினரின் பல்வேறு நடவடிக்கைகளில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 120ஆக இருந்தது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு பல ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஜூலை இறுதி வரை உள்ளூர்வாசிகள் தீவிரவாத குழுக்களில்  இணையவில்லை.

ஆகஸ்ட் 3ஆம் திகதி, சோபியான் அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் பிரமாண்டமான நிகழ்வொன்று நடைபெற்றது.  நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற தரப்பு மக்கள் கலந்துகொண்டதில் இருந்து பாதுகாப்பு நிலைமையின் முன்னேற்றத்தை அளவிட முடியும். 370வது பிரிவு இரத்து செய்யப்பட்ட பிறகு நடக்கும் நேர்மறையான முன்னேற்றங்களைத் தவிர அமைதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேம்படுத்தல் குறித்து மக்களின் ஆர்வம் வெளிப்படுகிறது.

சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் நடந்த சிறந்த விடயங்களில் ஒன்று நிர்வாகக் கட்டுப்பாட்டை மீட்டெடுத்தது. ஜம்மு –காஷ்மீரில் உள்ள பாதுகாப்பான சூழலால் ஊக்குவிக்கப்பட்டு, உறுதியளிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜம்மு – காஷ்மீரில் 14,000 கோடி ரூபாய் தனியார் முதலீடுகளை பெற்றுள்ளது. இருப்பினும், சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டு, புதிய தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 81,122 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களைப் பெற்றுள்ளது.

எனவே காஷ்மீரில் பொது மக்கள் அமைதியின் பலனை அறுவடை செய்யத் தொடங்கியுள்ள நிலையில், பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளால் திணிக்கப்படும் வேலைநிறுத்த அழைப்புகளை ஏற்றுக்கொள்பவர்கள் தற்போது இல்லை. சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்படுவதற்கு முன்பு, காஷ்மீரில் வணிகங்கள் மட்டுமல்ல, கல்வித்துறையும்  சீரழிந்திருந்தது. தற்போது நிலைமை மாறி காஷ்மீர் மக்கள் வாழ்க்கையில் புதுமைகள் இடம்பெறுகின்றன.