தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. அளவில் சிறிய நாடாக இருந்தாலும், பல தொல்பொருள் சிறப்புமிக்க கட்டிடங்களும், பழங்கால மாளிகைகளும் உள்ளதால் அல்பேனியாவிற்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணம் மேற்கொள்ள மக்கள் வருகின்றனர்.
மற்றொரு ஐரோப்பிய நாடான இத்தாலியில், சமீபகாலமாக தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இதனால் இத்தாலியிலிருந்து அல்பேனியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் இத்தாலியிலிருந்து அங்கு சென்ற 4 சுற்றுலா பயணிகள் பெரட் நகரத்திலுள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தினார்கள். ஆனால், அவர்கள் அதற்குண்டான கட்டணத்தை செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். இது சம்பந்தமான ஒரு கண்காணிப்பு கேமராவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் இத்தாலியின் அதிபர் ஜியோர்ஜியா மெலனி (Giorgia Meloni), அல்பனி நாட்டதிபர் எடி ரமா (Edi Rama) அழைப்பை ஏற்று தனது குடும்பத்துடன் அங்கு கோடைக்கால சுற்றுலாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு, நாட்டின் 4 சுற்றுலா பயணிகளின் நடத்தை குறித்த செய்தி எட்டியது. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் வரக்கூடாதென்பதால் அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை அவர்களுக்காக தானே கட்ட முடிவெடுத்தார்.
“அந்த முட்டாள்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டி விடுங்கள்” என இதுகுறித்து அல்பேனிய நாட்டிற்கான இத்தாலிய தூதரிடம் மெலனி தெரிவித்ததாக, அல்பனி அதிபர் எடி ரமா தெரிவித்தார். இத்தாலியின் விவசாய அமைச்சரும், மெலனியின் மைத்துனருமான பிரான்செஸ்கோ லோலோப்ரிஜிடா மெலனியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதிபரின் உத்தரவு குறித்த செய்தியை அவரும் உறுதி செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இது தேசத்தின் கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அதிபர் மெலனி இக்கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டவுடன், இதை செய்து முடிக்க, இத்தாலியின் தூதர் அல்பேனிய தலைநகர் டிரானாவிற்கு விரைந்தார். ஒரு சில நேர்மையற்ற நபர்கள் ஒழுக்கமான மக்களின் தேசமான இத்தாலியை சங்கடப்படுத்த விட மாட்டோம் இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய மதிப்பில் சுமார் ரூ.7245 பெறும் அந்த பில்லுக்கான கட்டணம் செலுத்தப்பட்ட செய்தியை அல்பேனியாவிலுள்ள இத்தாலிய தூதரகம் உறுதி செய்தது. ரோமானிய கலாச்சாரம் குறித்து உலகெங்கும் இன்றளவும் மக்கள் பெருமையாக பேசும் நிலையில், தங்கள் நாட்டின் கவுரவத்திற்காக அதன் அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்ததை மக்கள் மிகவும் பாராட்டுகின்றனர்.