ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரக்கு இடையிலான அண்மைய சந்திப்பு பலதரப்பட்ட முக்கிய கூட்டு முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தியது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைக்க அமெரிக்காவும் இந்தியா உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆரத்தி பிரபாகர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளிலும் பணியாற்றி வருகிறோம், செயற்கை நுண்ணறிவின் தீங்குகளை சமாளிக்கும் திறனை அதிகரிக்கவும், அதை நன்மைக்காகப் பயன்படுத்தத் தொடங்கவும் முடியும் என்று நினைக்கும் ஒரு நிர்வாக ஆணையை ஜனாதிபதி பைடன் பரிசீலித்து வருகிறார்.
இந்தியா உட்பட நமது சர்வதேச பங்காளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் உலகளவில் செயல்பட்டு வருகிறோம். இது உலகளாவிய தொழில்நுட்பம் என்பதால் தான் நட்பு நாடுகளை இணைத்துக்கொள்கிறோம். குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க விஜயத்தின் போது செயற்கை நுண்ணறிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
உலகின் ஒவ்வொரு பகுதியும் தங்கள் மதிப்புகளை வெளிப்படுத்தும் எதிர்காலத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முயற்சிப்பதை நாங்கள் அறிவோம். இந்த நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள பல விஷயங்களைப் பற்றி கருத்து வேறுபாடு கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், சர்வாதிகார ஆட்சிகளால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்தில் நாம் வாழ விரும்பவில்லை என்று பிரபாகர் கூறினார்.