ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைம நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி, ‘ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை. இணைப்பின் போது அதன் இறையாண்மை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா்இணைப்பு அப்போதே முற்றிலும் முழுமையாகிவிட்டது. பிரிவு 370-ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட விவகாரங்களில் ஜம்மு-காஷ்மீருக்கு இறையாண்மை உள்ளது என எடுத்துக் கொள்ள முடியாது’ என்றாா்.
இதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜாஃபா் ஷா, பிரிவு 370-இன்படி அரசியலமைப்பு அளித்த அதிகாரங்களின்கீழ் ஜம்மு-காஷ்மீா் தன்னிச்சையாகச் செயல்பட முடியும் என வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபிதி சஞ்சய் கிஷண் கெளல், ‘‘பிரிவு 370 நிரந்தரமானது என்று கூறுவது கடினம். நாட்டின் பிற பகுதியில் செயல்படும் எல்லா சட்டங்களையும் ஜம்மு-காஷ்மீா் அமல்படுத்த விரும்பினால், பிரிவு 370 என்ன ஆகும்? அந்தப் பிரிவை ரத்து செய்ய நாடாளுமன்றம் பின்பற்றிய வழிமுறை தற்போது கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள கூடியதா இல்லையா என்பதுதான் கேள்வி என்றாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆக. 16-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.