கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. இதன்படி 2023-ம் ஆண்டுக்கான ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. வரும் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 8-ம் தேதி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தர உள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி விமானத்தில் புறப்பட்டு 8-ம் தேதி டெல்லியில் தரையிறங்குவார். அவரோடு சுமார் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை தர உள்ளனர். அவர்களை மிகச் சிறந்த நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.