விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சே குறித்த அவுஸ்திரேலியாவின் கரிசனைகளை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் எனினும் அசஞ்சே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
பிரிஸ்பேர்னில் இடம்பெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இது குறித்த அவுஸ்திரேலியாவின் கரிசனையை வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தில் இருநாடுகளிற்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதை புலப்படுத்தும் விதத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் கருத்து அமைந்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கடந்த காலத்தை போல இம்முறையும் இந்த முறையும் இந்த விடயத்தை எழுப்பினார், நான் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்கின்றேன் அவுஸ்திரேலியர்களின் கருத்துக்கள் கரிசனைகளை நான் புரிந்துகொள்கின்றேன் எங்களின் நண்பர்கள் எங்கள் கரிசனைகளை புரிந்துகொள்வது அவசியம் என அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் இரகசியமான ஆவணங்களை பகிரங்கப்படுத்திய பெரும் குற்றச்சாட்டு அசஞ்சேயிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியரான ஜூலியன் அசஞ்சே வேவு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் 175 வருடகால சிறைத்தண்டனையை எதிர்நோக்குகின்றார்.
அசஞ்சே தற்போது லண்டனின் உயர்பாதுகாப்பு பெல்மார்ஸ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் ( 2019 முதல்)அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.