நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் ஒரியன் விண்கலன் சோதனையில் நாசா

அரை நூற்றாண்டு கடந்த பின்னர் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி கழகம் கையில் எடுத்தது. இந்த கனவு திட்டத்திற்கு உறுதுணையாக எலான் மஸ்கின் ஸ்பெக்ஸ் எக்ஸ் நிறுவனம், இந்தியாவின் இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் உதவுகிறது. இதற்கான திட்டத்தை ஆர்திமிஸ் என பெயரிட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் விண்கலன்களை தயாரித்து வருகின்றன.

இந்தநிலையில் ஆர்திமிஸ் 2 திட்டத்தை முன்னெடுத்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. அதற்காக ஒரு பெண் விண்வெளி வீராங்கனை உள்பட 4 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் தங்களை நிலவுக்கு அழைத்து செல்லும் ஒரியன் விண்கலத்தை முதல்முறையாக விண்வெளி வீரர்கள் நேரில் சென்று பார்த்தனர்.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஒரியன் விண்கலத்தை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

தங்களை உற்சாகப்படுத்தி கொள்ளவும் ஆயத்தப்பணிகளை முடுக்கி விடும் பணிக்காக விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் விண்கலத்தை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.