சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து காணொளி எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.
குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியிருக்கிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சிறிது காலத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பிரிந்து சென்றுள்ளார். குழந்தையை டெங் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், டெங் தனது கைக்குழந்தையின் முகத்தில் சுமார் 30 வினாடிகள், 30 முறை அறைந்து, அந்த செயலை படம்பிடித்து தனது காதலிக்கு அனுப்பியுள்ளார்.
இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வலியால் குழந்தை அழுதபோதும், முகம் சிவந்து வீங்கும் வரை டெங் அறைந்து கொண்டே இருக்கிறார். இந்த காணொளி கண்டு அதிர்ச்சியடைந்த பலர், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
“ஒரு தாயாக, இந்த காணொளி பார்த்து நான் அழுதேன். இந்த மனிதன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது ஒரு மனிதன் செய்யும் காரியமே அல்ல” என்று சமூக ஊடக பயனர் ஒருவர் கூறினார். “தந்தைக்கான உரிமையை அவரிடமிருந்து ரத்து செய்ய வேண்டும்.
இல்லையெனில் குழந்தை எதிர்காலத்தில் அதிகமாக இது போன்ற துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடும்” என்று மற்றொரு பயனர் கூறினார்.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங் நகராட்சி, திகிலூட்டும் இந்த காணொளி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டெங்கை விட்டு அக்குழந்தையின் தாயார் சென் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த டெங், இந்த காணொளி கண்டதும் சென் திரும்பி வருவார் என நம்பி இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த துன்புறுத்தலின் விளைவாக தாக்கப்பட்ட அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை. உள்ளாட்சி அமைப்பு அந்த குழந்தையை தற்போது கவனித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது. இதுதொடர்பாககாவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தந்தை டெங்கை கைது செய்தனர்.