புகலிடக் கோரிக்கையாளர்களை சர்ச்சைக்குரிய கப்பலுக்கு இடம்மாற்றுகிறது பிரிட்டன்

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களை சர்ச்சைக்குரிய கப்பலில் தங்கவைக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

‘பிபி ஸ்டொக்ஹோம்’ எனும் இக்கப்பலுக்கு முதல் கட்டமாக 15 பேர் கடந்த திங்கட்கிழமை அனுப்பப்பட்டனர்.  பிபி ஸ்டோக்ஹோம் ஆனது ஒரு பாரிய தெப்பம் (barge) ஆகும். 222 அறைகள் இதில் உள்ளன. 500 ஆண்களை இதில் தங்க வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சியினரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவான குழுக்களும் சட்டத்தரணிகளும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இதை மிதக்கும் சிறைச்சாலை என வர்ணிக்கின்றனர்.

சிறிய படகுகள் மூலம், ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரிட்டனுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் அதைரியப்படுத்துவதற்காகவும்   ,  புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல் அறைகளில் தங்க தங்க வைப்பதற்கு ஏற்படும் குறைப்பதற்காகவும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் 1976 ஆம் ஆண்டு பிபி ஸ்டொக்ஹோம்  நிர்மாணிக்கப்பட்டது. 3 அடுக்குகளைக் கொண்ட இக்கப்பலில் சமையலறை, உணவு மண்டபம், சலவை வசதிகள் ஆகியனவும் உள்ளன.

ஏற்கெனவே, நெதர்லாந்து, ஜேர்மனி உட்பட பல நாடுகள் இக்கப்பலை பயன்படுத்தியுள்ளன. பொதுவாக தொழிலாளர்களை தங்க வைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. ஆத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் வீடற்றவர்களை தங்க வைப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது,  இங்கிலாந்தின் தென்பகுதியிலுள்ள போர்ட்லண்ட் துறைமுகத்தில் பிபி ஸ்டோக்ஹோம் தரித்து நிற்கிறது.

இக்கப்பலின் பாதுகாப்பு குறித்து பல குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. ஒடுங்கிய நடைபாதைகளைக் கொண்ட இக்கப்பல் ஒரு ‘மரணப் பொறி’ என பிரித்தானிய தீயணைப்புப் படையினரின் சங்கம் விமர்சித்துள்ளது.

‘அங்கு 222 பேருக்கே இடவசதி உள்ளது, அரசாங்கம் விரும்புவதைப் போன்று 500 பேருக்கு அல்ல’ என அச்சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் பென் செல்பி கூறியுள்ளார்.

அங்கு தொற்றுநோய்கள் வேகமாக பரவக்கூடிய சூழல் குறித்து பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெனி ஹரீஸ் எச்சரித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் 45755 பேர் சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சென்றுள்ளனர்  என அந்நாட்டு அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடம் முதல் 6 மாதத்தில் 11,500 பேர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருட முதல் 6 மாதத்தில் கடந்தவர்களின் எண்ணிக்கையைவிட 10 சதவீதம் குறைவாகும். எனினும், கடந்த வருட 2 ஆவது அரைப்பகுதியிலேயே அதிகமானோர் இவ்வாறு பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

50,000 இற்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்போது ஹோட்டல்களில் தங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குடியேறுபவர்களை ஹோட்டல்களில் தங்க வைப்பதற்காக பிரித்தானிய அரசாங்கம் தினமும் 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை செலவிடுவதாக பிரிட்டனின் துணைப் பிரதமர் ஒலிவர் டோடன் தெரிவித்துள்ளர். பாதுகாப்புக் கரிசனைகளை அரசாங்கம் கருத்திற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தெப்பங்கள் தவிர, முன்னாள் இராணுவத்  தளங்கள் மற்றும் கூடாரங்களிலும் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முன்னர் திட்மிட்டது. எனினும், அது சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றமொன்று கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,  அகதிகளை பிபி ஸ்டொக்ஹோமுக்கு இடம்மாற்றுவது மன உளைச்சலை ஏற்படுத்தும் என கெயார்4கெலாசிஸ் எனும் அகதிகள் நலன்புரி அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஸ்மித் கடந்த திங்கட்கிழமை கூறியுள்ளார்.

பிபி ஸ்டொக்ஹோம் போன்ற ‘மிதக்கும் சிறைச்சாலையில்’ மனிதர்களை தங்கவைப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இவ்வாறு செய்வது முற்றிலும் மனிதாபிமானமற்றது என அவர் கூறியுள்ளார்.

எனினும்,   இக்கப்பல் ஒரு மிதக்கும் சிறைச்சாலை அல்ல என பிரித்தானிய உள்துறை அமைச்சின்,  புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட வசதிகளுக்கான பிரதிப் பணிப்பாளர் லியான் பாக் கூறியுள்ளார்.

அதேவேளை, “ஐக்கிய இராச்சியத்துக்கு அனுமதியற்ற வகையில்  வருபவர்கள் அடிப்படையான ஆனால், முறையான தங்குமிடத்தையே கொண்டிருக்க வேண்டும். அவர்கள் 4 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு எதிர்பார்க்க முடியாது” என பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் சாரா டைன்ஸ் கூறியுள்ளார்.