பூகோள வெப்பமடைதல் என்ற நிலையிலிருந்து ‘பூகோளம் கொதிக்கும் நிலை’ என்ற கட்டத்துக்கு உலகம் மாறியுள்ளது என ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ளார்.
வரலாற்றில் இதுவரை பூமியின் சராசரி வெப்பநிலை மிக அதிகமாக பதிவான மாதமாக 2023 ஜூலை மாதம் விளங்கும் என புதிய ஆய்வொன்று தெரிவித்துளளது. இந்நிலையில் நியூயோர்க்கிலுள்ள ஐநா தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றுகையில் ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் இவ்வாறு கூறினார்.
“உலக வளிமண்டலவியல் ஸ்தாபனமும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் கொப்பர்னிக்கஸ்; காலநிலை மாற்ற சேவையும், புதிய தரவுகளை வெளியிடுகின்றன. மனிதகுல வரலாற்றில் 2023 ஜூலை மாதமானது பதிவான மிக அதிக வெப்பமான மாதமாக இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன”என அவர் கூறினார்.
“இம்மாதம் முடிவடையும் வரை இதற்கு நாம் காத்திருக்கத் தேவையில்லை. குறுகிய பனியுகமொன்று சில தினங்களில் ஏற்படும். 2023 ஜூலையில் பல சாதனைகள் தகர்க்கப்படும்.
அதிக வெப்பமான 3 வாரகாலம் இந்த ஜூலையில் பதிவாகியுள்ளது. வட அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் முழு கிரகத்திலும் இது கொடூரமான கோடைப் பருவமாகும். இது ஒரு பேரழிவு.
விஞ்ஞானிகளைப் பொருத்தவரை மனிதர்களே இதற்குக் காரணம். இவை அனைத்தும் எதிர்வுகூறல்களுக்கும், தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்கும் இணக்கமாக உள்ளன. இந்த மாற்றத்தின் வேகம் மாத்திரமே வியப்பளிக்கிறது. காலநிலை மாற்றம் வந்யுதுவிட்டது. இது திகிலூட்டுகிறது. இது இப்போதுதான் ஆரம்பிக்கிறது.
பூகோள வெப்பமடைதல் யுகம் முடிந்துவிட்டது. பூகோள கொதித்தல் யுகம் வந்துவிட்டது. வளியை சுவாசிக்க முடியவில்லை. வெப்பம் சகித்துக்கொள்ளப்பட முடியாதுள்ளது” எனவும் ஐநா செயலாளர் நாயகம் குட்டேரெஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஜூலையின் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பூமியின் சராசரி வெப்பநிலையில் மிக அதிக வெப்பமான நாட்களாக பதிவாகியதாகவும், ஜூலை 6 ஆம் திகதி பூமியின் சரசரி வெப்பநிலை 17.23 பாகை செல்சியஸாக (40.1 பாகை பரனைட்) பதிவாகியதாகவும் உலக வளிமண்டலவியல் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது 2016 ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்த 16.9 பாகை செல்சியஸ் சாதனையை முறியடித்துள்ளதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த 12,000 வருடங்களில் நிலவிய மிக அதிக வெப்பநிலையாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.