பெண்களுக்கு ‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை: சவுதி, குவைத்தில் புதிய சட்டம்

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன.

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமானது ஹார்ட் எமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த எமோஜியை பயன்படுத்துவதுண்டு.

இந்த நிலையில், இந்த ஹார்ட் எமோஜியை அறிமுகமில்லாத பெண்களுக்கோ அல்லது துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலோ அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டம் ஒன்றை குவைத் அரசு இயற்றியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனையும், 2000 தினார் (ரூ.5,37,800) அபராதமும் விதிக்கப்படும்.

இதே போன்று, குவைத்தின் அண்டை நாடான சவுதியிலும் 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரியால் (ரூ.22 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதனைச் செய்தால் அபராதம் 3 லட்சம் ரியால் வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.