மகன், மருமகனின் நலனுக்காக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

மகன் மற்றும் மருமகனின் நலன்களை பாதுகாக்கும் சோனியா காந்தியின் முயற்சியே நம்பிக்கையில்லா தீர்மானம் என்று பாஜக எம்,பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த விவாதத்தில் அரசுத் தரப்பில் முதல்நபராக, ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பேசியதாவது:

சோனியா காந்தி இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். தனது மகனை (ராகுல் காந்தியை) நிலைநிறுத்த வேண்டும், மருமகனின் (ராபர்ட் வதேரா) நலனை பாதுகாக்க வேண்டும். இதுவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுரப்பட்டதற்கான அடிப்படையாகும்.

‘இது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு அல்ல, எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்மை யார் ஆதரிக்கிறார்கள் என்று அவர்கள் பார்க்க விரும்புகின்றனர்’ என்று பிரதமர் மோடி கூறினார்.

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. மன்னிப்பு கேட்கப்போவதில்லை என இப்போதும் ஒருவர் (ராகுல் காந்தி) கூறுகிறார்.

ஒப்பிட வேண்டாம்: தாழ்த்தப்பட்ட மோடி சமூகத்தினரிடம் பெரிய ஆட்களாக இருக்கும் நீங்கள் மன்னிப்பு கேட்க தேவையில்லை. அடுத்து நான் சாவர்க்கர் அல்ல என்றும் அவர் (ராகுல்) கூறுகிறார். சாவர்க்கரின் உயரத்தை நீங்கள் ஒருபோதும் அடைய முடியாது. சாவர்க்கர் 28 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

உங்களை சாவர்க்கருடன் ஒப்பிட வேண்டாம். நீங்கள் ஒருபோதும் சாவர்க்கர் ஆக முடியாது. இவ்வாறு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறினார்.