மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடத்துகிறது சவூதி அரேபியா

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் ஆகஸ்ட் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடத்த ஒப்புதல் அளித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 85 நாடுகளைச் சேர்ந்த 150 புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், மதத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கேற்கவுள்ளனர்.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள், சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பல சர்வதேச பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

‘உலகில் உள்ள மத விவகார திணைக்களங்கள், இஃப்தா, அரபு நாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல துறைகளுடனான தொடர்பாடல்’ என்ற கருப்பொருளை தாங்கிய இந்த மாநாடு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏழு கட்டங்களைக் கொண்ட அமர்வுகளாக நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் மிதவாதம், தீவிரவாதம், சமூக சீரழிவு, பயங்கரவாதம், சகிப்புத்தன்மை மற்றும் மக்களுக்கிடையேயான சகவாழ்வு போன்ற தலைப்புகள் கலந்துரையாடப்படவுள்ளன.

உலகில் உள்ள மத விவகார திணைக்களங்கள், இஃப்தா மற்றும் அரபு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் ஒருங்கிணைப்பினை வலுப்படுத்துதல், உயர் கொள்கைகளை அடைதல், மக்களிடையே சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு முதலிய பண்புகளை வளர்த்தல் போன்ற விடயங்களை இம்மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு சேவை செய்தல், முஸ்லிம்களிடையே ஒற்றுமையை ஊக்குவித்தல், தீவிரவாதக் கருத்துகள், நாத்திகத்தால் ஏற்படும் சமூக சிதைவுகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றுடன் புனித அல்குர்ஆன் மற்றும் நபியவர்களின் வாழ்க்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் இந்த மாநாட்டின் நோக்கம் காணப்படுகிறது.

அத்தோடு, இந்த மாநாடு இஸ்லாமிய உலகை கட்டியெழுப்புவதிலான சவூதி அரேபியாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டக்கூடிய வகையில் அமையக்கூடிய அதேவேளை சர்வதேச இஸ்லாமிய தலைவர்களுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பின் மூலம் உலக மக்களிடையே வன்முறை மற்றும் வெறுப்புணர்வுகளை தணிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகவும் அமைகிறது.