மனிதஉரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன.இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

கறுப்பு ஜூலையின் கொடுமை பதற்றத்தை அதிகரித்து சில தசாப்தங்கள் நீடித்த ஆயிரக்கணக்கானோர் மரணமாகிய ஆயுதமோதலாக மாறியதுடன்  இதன் மனப்பாதிப்பை சமூகங்கள் தற்போதும் அனுபவிக்கின்றன.

சோகமான இந்த நாளில் நாம் தமிழ் கனேடியர்களுடனும் உலகம் எங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடனும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்தி தப்பிப்பிழைத்தோரை கௌரவிப்பதுடன் வெறுப்பிற்கும் வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல்கொடுப்பதற்கு உறுதியுடன் இருப்பதை மீள வலியுறுத்துகின்றோம்.

மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரித்து இவ்வாண்டில் இந்த நாள் முதல்முறையாக கடைப்பிடிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம்இ மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது.