இந்தோனேசியா: மனித கடத்தல் குற்றங்களை ஒழிப்பதற்கு அதீத வறுமையினை ஒழிப்பது மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சர் டிரி ரிஷ்மகாரினி குறிப்பிட்டிருக்கிறார்.
“மனித கடத்தல் குற்றங்களுக்கு அடிப்படையாக வறுமை இருக்கிறது. எல்லையோர பகுதிகள் மனித கடத்தலால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது,” என இந்தோனேசிய அமைச்சர் கூறியிருக்கிறார்.
மக்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் ஆட்கடத்தல்காரர்களின் ஆசை வார்த்தைகளுக்கு எளிதாக இரையாக மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“இதன் காரணமாக சமூக விவகாரங்கள் அமைச்சகம் மக்களின் பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்த முயற்சிக்கிறது. இதனால் அவர்கள் புலம்பெயரும் எண்ணத்தினை கொண்டிருக்க மாட்டார்கள்,” என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில், மனித கடத்தல் அதிகம் நிகழும் இந்தோனேசியாவின் எல்லையோரப் பகுதிகளில் உள்ள மக்களை வறுமையிலிருந்து மீட்க தொழில்களை உருவாக்கும் சிறப்பு அணுகுமுறையினை அமல்படுத்த இந்தோனேசிய அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.