தன் மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி ஒருவரின் வீட்டில் 47 துப்பாக்கிகளும் 26,000 தோட்டாக்களும் காணப்பட்டதாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் நீதிபதிகளில் ஒருவரான ஜெப்ரி பேர்குசன் (72), கடந்த வருடம் மதுபோதையில் தனது மனைவியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
தமது வீட்டுக்கு அருகிலுள்ள உணவு விடுதியொன்றில் பேர்குசனுக்கும் 65 வயதான அவரின் மனைவி ஷெரிலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக நீதிமன்றில் தெரிவி;க்கப்பட்டது.
இவ்வாக்குவாதத்தின்போது, தனது விரல்களை துப்பாக்கிப் போன்று மனைவியை நோக்கி பேர்குசன் நீட்டினார் என அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.
இவ்வாக்குவாதம் இத்தம்பதியின் வீட்டிலும் தொடர்ந்தபோது, ‘ஏன் உண்மையான துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டவில்லை’ பேர்குசனின் மனைவி ஷெரில் கேட்டார். அப்போது தனது மனைவியை நோக்கி பேர்குசன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்’ எனவும் மேற்படி சட்டத்தரணி கூறினார்
பொலிஸார் அவ்வீட்டுக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது 47 துப்பாக்கிகள் காணப்பட்டதாகவும் ஆனால், அவை சட்டபூர்வமான துப்பாக்கிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் மீதான கொலைக் குற்றச்சாட்டை பேர்குசன் நிராகரித்துள்ளார். இவ்வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.